ஜார்கண்ட் மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தல் - 62.54 சதவீத வாக்குப்பதிவு

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.





இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.  இதற்காக வாக்கு சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.  வாக்கு இயந்திரங்களை அதிகாரிகள் முறைப்படி சரிபார்த்தனர்.  இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.





இந்த தேர்தலில் மொத்தம் 47,85,009 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 15 தொகுதிகளிலும் மொத்தம் 6101 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் 23 பெண்கள் உட்பட 221 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்நிலையில் 15 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும், சராசரியாக 62.54 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஐந்தாம் கட்ட மற்றும் இறுதிக்கட்டமாக 16 தொகுதிகளுக்கு டிசம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறுகிறது.